• ஆரோக்கியமான உலகுக்கு தூய்மையான தண்ணீர்

    For Healthy World, Pure Drinking Water United Nations
     
       ஆரோக்கியமான உலகுக்கு தூய்மையான தண்ணீர்
    "உண்ணுங்கள், பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள். வீண்விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை." (அல்குர்ஆன்7:31)
    உலகப் பரப்பில் முக்கால் பகுதி தண்ணீர் தான் என்றாலும் அதில் மக்களுக்குப் பயன் படக்கூடிய  சுத்த நீரின் விகிதம் மிகக் குறைவு. பூமி பரப்பில் நீரின் இருப்பு 71 விழுக்காடாக அமைந்திருந்தாலும், பயன்படத்தக்க நீரின் அளவு 0.26 விழுக்காடு என்ற மிக சொற்ப அளவாகவே உள்ளது.
    உலகப் பரப்பில் முக்கால் பகுதி தண்ணீர் தான் என்றாலும் அதில் மக்களுக்குப் பயன் படக்கூடிய  சுத்த நீரின் விகிதம் மிகக் குறைவு. உட்கொள்ளத் தக்க சுத்தமான நீர் என்பது - கானல் நீராகி வருகின்றது. சுத்தமான நீரை - அசுத்தம் செய்யும் நாம் அனைவருமே சமுதாயக் குற்றவாளிகள்தான். எதிர் காலச் சந்ததியினருக்கு, நாம் இந்த உலகில் பிறந்தபோது காற்றும் நீரும் எவ்வளவு சுத்தமாக இருந்ததோ அதை அதே அளவு சுத்தமாக அல்லது அதைவிடச் சுத்தமாக நம்மால் விட்டுப் போக முடியவில்லை.
    தண்ணீரின் பயன்பாடு மற்றும் தூய்மையை பாதுகாத்தல் போன்றவற்றில் நாடுகளை ஆளும் அரசுகளும், பொதுமக்களும் அதி முக்கியத்துவம் அளித்தாலன்றி எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவியலாது என்பதுதான் உண்மை. மனித சமூகம் ஏற்படுத்தும் கெடுதிகளால் இன்று தண்ணீரின் தன்மை மாசுபட்டு மனித சமூகம் பெரும் அபாயத்தை நோக்கி நிற்கிறது.                       மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க நீரின் தேவையும் அதிகரிக்கத்தானே செய்யும்? வாழ்க்கை முறைகளால் அதிகரித்த நீர்த் தேவையுடன்,  நீரில் கலக்கும் பூச்சி கொல்லிகள், மற்ற ரசாயனங்கள், இவை தவிர மக்கள் பண்ணும் அசுத்தங்கள் சொல்லி மாளாது.
    இந்த அசுத்தப் படுத்தும் நடவடிக்கைகளை நாம் குறைத்துக் கொள்ளாவிட்டால், நம் சந்ததியினர் குடி தண்ணீருக்கு மட்டும் தம் நாளின் பெரும் பகுதியை செலவழிக்க நேரும். தண்ணீருக்காக சமூகத்தின் ஒரு பகுதியினர் அல்லலுறும் பொழுது இன்னொரு பகுதி தண்ணீரை விரையம் செய்வதிலும், மாசுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் கொடுமை நிகழ்ந்தேறுகிறது.
    கடல்,ஆறு,குளம்,குட்டை,கிணறு என எல்லாவிதத் தண்ணீர் நிலைகளும் மாசுபடுத்தப்பட்டே வருகின்றன.தண்ணீர் மனிதனைப் படைத்த வல்ல இறைவனின் அருட்கொடைகளில் மகத்தானது. இறைவன் கூறுகிறான்:
    "உங்களை அதைக்கொண்டு தூய்மைப்படுத்துவதற்காகவும் அவனே வானத்திலிருந்து உங்கள் மீது மழையையும் இறக்கி வைத்தான். (அல் அன்ஃபால், 8:11),  
    ''(மனிதர்களே) நாம் தாம் வானத்திலிருந்து பரிசுத்தமான நீரை இறக்கியும் வைக்கிறோம்." (அல்ஃபுர்கான், 25:48)
    இறைவனின் பரிசுத்தமாக இறக்கிவைத்த தண்ணீரை மாசுபடுத்தி சீரழிக்கும் மனித சமூகத்தினை என்னவென்று கூறுவது? இன்று எந்தத் தண்ணீர் இறைவனது அருட்கொடையோ அதனை இன்று மனித வாழ்வை சீரழிக்கும் சாராய மதுபான வகைகளுக்கு பயன்பத்தும் இழிநிலைக்கு மனித சமூகம் சென்றுவிட்டது. இந்த 50 வருடங்களில் பெருகிவிட்ட தொழிற்சாலைகள், இவற்றின் கழிவுகள் முறையாக சுத்திகரிக்க படாமல், நேரிடையாக கலப்பதால், நீர்நிலைகளும், வயல்களுக்கு இடப்படும் இராசயன உரங்கள், பூச்சிகொல்லிகள் இவற்றால் நிலத்தடி நீரும் பெருமளவு மாசுபட்டு போகின்றன.
    நமது முக்கியமான நீராதாரம் நிலத்தடி நீராகும். விவசாயம், நமது அன்றாட தேவைகளுக்கு நிலத்தடி நீரையே உறிஞ்சுகிறோம்.
    எனவே இதுத்தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படவேண்டும். தண்ணீரை வீண்விரயம் செய்யாமல் முறையாகப் பயன்படுத்த வேண்டும். நமது சுற்றுப்புற சூழலை மாசுப்படாமல் பாதுகாக்க வேண்டும். நமது தேவை போக மீதமான தண்ணீரை பிறருக்கு கொடுக்கும் மனோநிலையும் நமக்கு வரவேண்டும்.





0 comments:

Leave a Reply

Related Posts Plugin for WordPress, Blogger...