• தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 57வது பொதுக்குழு கூட்ட நிகழ்வுகள்!

    தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 57வது பொதுக்குழு கூட்ட நிகழ்வுகள்!

    நவம்பர் 5 வெள்ளியன்று மாலை தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 57வது பொதுக்குழு கூட்டம் நவ்பல் இஸ்மாயில் அவர்கள் இல்லத்தில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர். அம்மன்ற சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு :-



    தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 57வது பொதுக்குழு கூட்ட நிகழ்வுகளை சகோதரர் அப்துல் காதர் சூபி கிராஅத் ஓதி துவக்கி வைக்க, சகோதரர் ஷாதுலி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து மன்ற தலைவர் டாக்டர் முஹம்மது இத்ரீஸ் அவர்கள் முன்னுரை வழங்கினார்.



    தலைவருக்கே உரித்தே நடையில் இறுதியில் பேசப்படும் நன்றி அறிவித்தலை முற்படுத்தி, பொதுக்குழுவின் சிறப்புக்கு உதவி புரிந்தவர்களுக்கும், உணவுக்கு உறுதுணையாய் நின்றவர்களுக்கும் நன்றி கூறினார். தங்களின் இல்லங்களில் புதியதாய் குழந்தைச் செல்வங்களின் வரவால் மகிழ்ந்திருக்கும் பெற்றோருக்கு வாழ்த்து கூறியும், அவர்களுக்காக எல்லோர் சார்பிலும் தலைவர் துஆ செய்தார். மிக முக்கியமாக, நமதூரில் நிலவி வரும் "தலைப்பிரசவத்தின் செலவுகள் பெண்ணின் தாய் வீட்டோடுதான்" என்ற மிகப்பழமையான, நிறுத்தப்பட வேண்டிய மோசமான பழக்கத்தை கடுமையாக சாடினார். இளைஞர்கள் முனைந்தால் இம்மூட வழக்கத்துக்கு மூடி போட்டு முடிவு கட்டலாம் என்று வலியுறுத்தினார்.

    அடுத்து பொதுச்செயலாளர் அஹமது ரபீக் அவர்கள் 56வது பொதுக்குழுவுக்குப் பின்பு வழங்கப்பட்ட உதவிகள் குறித்தும், மன்றம் சார்பில் ஊரில் நடத்தி முடித்த சமுதாய நல நிகழ்வுகள் பற்றியும் விளக்கமாக உரையாற்றினார்.



    தொடர்ந்து சகோதரர் ஹஸன் ஜாபர் அவர்கள் சமீபத்தில் மன்றம் சார்பில் தானும், செயலர் ரபீக், சகோதரர் புஹாரி மற்றும் சகோதரர் இஸ்மாயில் ஆகியோர் இணைந்து வெற்றிகரமாக நடத்தி முடித்த கல்வி விழிப்புணர்வு முகாம், சிதிலமடைந்த வீடுகளைச் செப்பணிட்டு வழங்கிய திட்டம் (5 வீடுகள்), மருத்துவ முகாம் (HEPATITIS - B - VACCINATION இலவச தடுப்பூசி) ஆகியன குறித்து முழு விபரங்களையும் வழங்கினார்.



    இடைவேளையில் இனிப்பு, கார வகைகளுடன் கறிக்கஞ்சி வழங்கப்பட்ட பிறகு அல்கோபர், தம்மாம் பகுதிகளுக்கு பணியில் இணைந்திருக்கும் புதிய உறுப்பினர்களின் அறிமுகம் நடைபெற்றது.



    தொடர்ந்த கருத்துப் பரிமாற்ற நிகழ்வில் சகோதரர் மீரான் அவர்கள் நமதூரில் நிகழ்ந்த சில வெறுக்கத்தக்க ஒழுங்கீனங்களைப் பற்றி மிக வருத்தத்துடனும், சமூக அக்கறையுடன் எடுத்துரைத்து அதனை ஒழித்துக் கட்டும் வழிவகைகளையும் உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

    இறுதியில் துஆ வுடன், இரவு உணவு (எடுத்து செல்லும் வகையில்) வழங்கப்பட்டு கூட்டம் இனிதே நிறைவுற்றது.


    தகவல் மற்றும் புகைப்படங்கள்:
    M.M. முஹம்மது ஹஸன்

0 comments:

Leave a Reply

Related Posts Plugin for WordPress, Blogger...